உலகமெனும் மாமேடையில் யாம் இசைச்சக்கரவர்த்திகள்
கனவுக் கோட்டையின் உச்சியில் உலாவும் காவியநாயகர்கள்
ஆர்ப்பரிக்கும் கடற்கரையோர மணல்வெளியில் ஏகாந்தமாய்த் திரிவோம் !
எங்களின் நிரந்தர இருக்கைகளோ கதியற்ற நீரோடைகள்
வேதனையும் விரக்தியும் தவிர இப்பூவுலகம் எமக்கு எதை அள்ளித்தந்தது
வெள்ளிய நிலவுகூட எம்மீது ஊடல் கொண்டு வெம்மைஒளி வீசுகிறதே !
எது எப்படியானாலும் இன்னுயிர்களின் நகர்தலும் நடுக்கமும்
எம்போன்ற கவிஞர்களால் அல்லாது வேறு எவரால் நிகழும் ?
சாகாவரம் பெற்ற எங்களின் சங்கீத ஞானத்தால்
மன்னுலகில் மாநகரங்கள் முளைக்கும் ;தழைக்கும் !
எம் வரையறையற்ற கற்பனை ராஜாங்கத்தால்
மாமன்னர்களின் சிம்மாசனமும் செங்கோலும் உயரும் !
பேரரசர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் எங்களில் ஒருவன் மனது வைத்தால் மணிமகுடம் சாயும் !எம் புத்தம்புது கீதத்தின் நாவசைப்பு மகுடத்தில் மாணிக்கம் பதிக்கும் !
மண்ணில் புதைத்தாலும் புதைந்தாலும் மீண்டெழும் எம்குலம்
காலச்சக்கரச்சுழற்சியில் என்றுமே சிக்கித் தொலையாது ! எம் கணநேர கற்பனைச் சிறகடிப்பில் விண்ணுக்கும் மண்ணுக்கு மாக மலர் ஏணி அமைப்போம் !
எங்கள் எழுதுகோல்கள் அழிவுக்குப் பிரியா விடை கொடுக்கும் !
புதுமைக்கும் பழமைக்கும்கூட பாலம்கட்டும் பாக்களினால்
முக்காலமும் உணர்ந்த தீர்க்கதரிசிகளாம் யாம் நாகரிகத்தின்
கருவறை மட்டுமல்ல ;கல்லறையும்தான் என்பதில் ஐயமும் உண்டோ ?
கவிஞர்களின் தூயசுவாசங்கள் மட்டுமே நிர்ணயிக்கின்றன
பூலோகவம்சாவளிகளின் வரவுகளையும் செலவுகளையும்
எம் கற்பனை எல்லை வானைமுட்ட, அழகற்றவை அர்த்தப்படுத்தப்படும் !
இருக்கின்றவை அதிசயப்படுத்தப்படும் ; இல்லாதவை நிரூபணம் செய்யப்படும் ; அரண்மனைவாசியானாலும் சரி !அகிலத்தின் கடைக்கோடி வாசியானாலும் சரி !
வானமெனும் கூரையின் கீழ் வாழ்வெனும் சமுத்திரத்தில் தத்தளிக்கும்போது எம் கனவுகளின் ஊர்வலங்களே அவர்தம் நிகழ்கால நகர்தலுக்கு கலங்கரைவிளக்கமாய் வழிகாட்டும் என்பது என்றேனும் பொய்க்கூற்றாகுமோ ?
மொழிபெயர்ப்பு : ச.சந்திரா
நன்றி :ஆர்தர் வில்லியம்
No comments:
Post a Comment