Pages

Sunday, May 8, 2011

சாந்தோமின் வரலாறு


இந்நாட்களில் சாந்தோம் மற்றும் மைலாப்பூர் இரண்டு பெயர்களும் ஒரே பகுதியைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால அந்நாட்களில் இப்பெயர்கள் இரண்டும் இரண்டு வித்தியாசமான இடங்களைக் குறிப்பிடும். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பிருந்தே இலங்கி வரும் ஊராகக் கருதப்படும் மைலாப்பூர், மிகப் பழமையான இந்திய ஊர். சாந்தோம் பதினேழாம் நூற்றாண்டு போர்த்துக்கீசிய அமைவிடம். செயிண்ட் தாமஸ் தி அபோஸ்டல் மயிலையில் தான் புதைக்கப்பட்டதாக ஒரு நம்பிக்கை இருந்தது. போர்த்க்துக்கீசியர்கள் முதலில் இந்தியா வந்த போது, அவர்களுள் சிலர் மயிலைக்கு அவரது மிச்சங்களைப் பார்க்க வந்தனர்.
அவர்கள் சில பாழடைந்த கிறித்துவ ஆலயங்களையும், செய்ண்ட் தாமஸ் புதைக்கப்பட்டதாக நம்பப்படும் இடத்தையும் கண்டனர்.

விரைவில் அந்த இடத்தில் ஒரு வழிபாட்டிடம் எழுப்பப்பட்டது. அதனைச் சுற்றிலும் ஒரு போர்த்துக்கீசிய நகரம் வளர்ந்தது. காலப்போக்கில் அந்த நகரம் ஒரு வணிபப் பகுதியாக மாற, கோட்டை மதிலால் சூழப்பட்டு, இந்திய நகரமான மயிலாப்பூருக்கு இணையாக மாறியது.

பதினாறாம் நூற்றாண்டில் இந்தியா வந்த ஒரு இத்தாலிய வணிகர், சாந்தோமைப் பற்றி 'நிலத்தின் மேல் தான் கண்டவற்றுள் அழகிய நகரம்' போல் இருந்ததாகவும், மயிலாப்பூர் களிமண் சுவரால் சூழப்பட்ட ஒரு இந்திய நகரமாகவும் குறிப்பிடுகிறார்.

ஆகாவே மயிலாப்பூர் சாந்தோமின் கறுப்புப் பகுதியாக இருந்தது. ஆனால் பின்னாட்களில் இரண்டும் ஒன்றிணைந்தன.

ப்ரிட்டிஷார் செய்ண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வந்த போதே, போர்த்துக்கீசியரின் பலம் குன்றத் தொடங்கி இருந்தது; மற்றும் அவர்களது செல்வாக்கு வளர வளர, போர்த்துக்கீசியரின் ஆதிக்கம் சாந்தோமில் மேலும் குறையக் காரணமாக இருந்தது.; அதன் இயல்பான பின் நிகழ்வாக மயிலாப்பூரை உள்ளடக்கிய சாந்தோம் அவர்களது ஆக்ரமிப்பிற்கு ஆளாகியது.


சாந்தோமின் முதல் வெற்றியாளர் மண்ணின் அரசரான கோல்கொண்டாவின் இஸ்லாமிய மன்னர்.அடுத்து ப்ரெஞ்சுக்காரர்கள் அதனை கோல்கொண்டாவிலிருந்து எடுத்துக் கொண்டார்கள்; இரண்டு வருடங்களுக்குப் பின் கோல்கொண்டா, டச்சுக்காரர்களின் துணையுடன் ப்ரெஞ்சுக்காரர்களிடம் இருந்து மீண்டும் தன்வசப்படுத்தினர். டச்சுக்காரர்கள் தங்களது உதவிக்கு கிடைத்த பரிசோடு திருப்திப்பட்டுக் கொண்டதால், சாந்தோமை கோல்கொண்டாவின் ஆதிக்கத்திற்கே விட்டு விட்டார்கள். ப்ரிட்டிஷாரின் சுய அறிவுரையின் பேரில் கோல்கொண்டா அங்கிருந்த கோட்டைகளை அழித்தது. பின் அந்நகரத்தை விற்பனை செய்வதாக அறிவித்தது. கிழக்கிந்தியக் கம்பெனியார் அதனை வாங்கத் தயாராயினர்; போர்த்துக்கீசியரும். ஆனால் ஒரு பணக்கார முஸ்லீம் கோல்கொண்டாவின் முஸ்லீம் அதிகாரிகளுக்காக சாந்தோமை குறைந்த கால குத்தகைக்கு எடுத்தார். அடுத்து 'பூந்தமல்லி இந்து கவர்னருக்கு' லீஸுக்கு விடப்பட்டது. பிறகு ஒரு பெரும் விலைக்கு மீண்டும் போர்த்துக்கீசியரின் கைகளுக்கே சென்றது. பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் முகலாயப் பேரரசரான ஒளரங்கசீப் கோல்கொண்டா ராஜ்யத்தைக் கைப்பற்றியதால், போர்த்துக்கீசியர் சாந்தோமை விட்டு வெளியேறா விட்டாலும், அப்பகுதி முகலாய சாம்ராஜ்யத்தின் ஓர் அங்கமாக மாறி, முகலாய ஆட்சியின் கீழ் வந்தது. ஒளரங்கசீப்பின் மறைவிற்குப் பின் பேரரசு உடைய, ஆற்காட்டு நவாப் தம்மை சுதந்திரமாக அறிவித்துக் கொண்டு, சாந்தோமை தன் ஆளுகைக்குக் கீழ் கொண்டு வந்தார்.

கி.பி.1749-ல் ப்ரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றியிருந்த மதராஸை மீண்டும் ப்ரிட்டிஷாரிடமே கொடுத்து விட வேண்டும் என்று இங்கிலாந்து மற்றும் ப்ரான்சுக்கிடையே, பாரீஸில் உடன்படிக்கை கையெழுத்தானது. அதனால் மனம் நொந்து போன புதுச்சேரியின் துய்ப்ளேக்ஸ் மதராஸை இழந்ததற்கு ஈடாக சாந்தோமை கைப்பற்றிக் கொள்ள திட்டங்கள் தீட்டினார். செய்ண்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்த ப்ரிட்டிஷாருக்கு இந்த விவரங்கள் தெரிந்து போய், ப்ரெஞ்சுக்காரர்கள் போன்ற தீவிர எதிரியை இவ்வளவு அருகில் பக்கத்து ஊர்க்காரனாக வைத்திருக்கத் துளியும் விரும்பாமல், துய்ப்ளேக்ஸை முந்திக் கொண்டு ஆற்காட்டு நவாப்புடன் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டனர். அதாவது, 'மயிலாப்பூர் மற்றும் சாந்தோமை' நவாப் கம்பெனியாருக்குக் கொடுத்து விட வேண்டியது. கம்பெனி அதற்கு இணையாக நவாப்பிற்கு பணமும், ஆட்களும் அவர் கேட்கும் போதெல்லாம் கொடுத்து உதவும். இப்படியாக சாந்தோம் ப்ரிட்டிஷாரின் ஆளுகைக்குள் வந்தது. இடையில் சில காலம் Count Lally தலைமையில் ப்ரெஞ்சுக்காரர் வசமும், மைசூரின் ஹைதர் அலியிடமும் சென்றாலும், ப்ரிட்டிஷாரிடமே அது தொடர்ந்து இருந்து வந்தது.

1 comment:

  1. வரலாறுகள் எப்போதும் சுவாரசியமானவையும், கூடவே நாம் அவசியம் அறிந்து கொள்ள வேண்டியவையுமாகும்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...